Monday, 6 February 2012

ரா ஒன் (ஹிந்தி) தி���ை விமர்சனம்




ஒரு நல்ல திறமை வாய்ந்த இயக்குனர் ஒரு படத்துக்கு எவ்வளவு முக்கியம் என்பதை இப்படம் காட்டுகிறது. தமிழ் ' எந்திரனோடு ' ஒப்பிட்டே தீர வேண்டும். அங்கு மூன்று ரஜினி (விஞ்ஞானி வசீகரன், நல்ல சிட்டி, வில்லன் சிட்டி Ver 2.0) கேரக்டர்களும் மிக அழகாக வடிவமைக்கப் பட்டிருந்தார்கள். துவக்கத்தில் சிட்டி செய்யும் காமெடிகளும் பார்த்துப் பார்த்து செய்யப் பட்டிருந்தன. இங்கே அப்படி அல்ல. ஆரம்பக் காட்சிகளில் சேகர் சுப்ரமணியம் ஷாருக் கான் (சேகர் என்ற பெயர் ஷாருக் கானுக்கு மிகவும் பிடிக்கும் போல! நினைவிருக்கிறதா அந்த காலத்து தூர்தர்ஷனில் 'சர்க்கஸ்' சீரியலில் சேகரன் என்ற பெயரில் முதலாளியின் மகனாக வந்தது அவரேதான்!) ஏதோ 'மிஸ்டர் பீன்' போலத் தடுக்கி விழும் காமெடி நிறைய செய்கிறார் . பின்னணியில் ' பைத்தியக்காரா! பைத்தியக்காரா! பைத்தியக்காரா!' என்ற காமெடி மியூசிக் ஒலிக்கிறது. நூடில்ஸில் தயிரைக் கலந்து கையால் ஒரு வெட்டு வெட்டுகிறார். நான்கு ஆண்டுகள் முன்பு வெளி வந்த 'ஓம் ஷாந்தி ஓம்' இல் ஷாருக் ஒரு காட்சியில் தமிழ்ப் பட நடிகராக 'என்னடா ராஸ்கலா' என்று 'அய்யய்யோ ஜீ' தமிழ் பேசியிருப்பார். அதே போல் இங்கும் ஒன்றிரண்டு 'அய்யய்யோ ஜீ' தமிழ் வசனம் பேச முயற்சிக்கிறார். அங்கே பரவாயில்லை; இந்தப் படத்தில் ஒரு முழு தமிழ் கேரக்டருக்குத் தேவையான 'ஹோம் வொர்க்' செய்யவே இல்லை. என்னத்தைச் சொல்ல? மறைந்த காமெடி நடிகர் மெஹ்மூத், தான் ஆரம்பித்து வைத்த மதராஸி காமெடிகளின் மூலம் தமிழர்களுக்கு ஒரு தீராத நியூசன்சை உண்டாக்கி விட்டுப் போய் விட்டார்.

(Disclaimer: Spoilers ahead!) ஆனால் இவர் நல்ல திறமை வாய்ந்த வீடியோ கேம் டிசைனராம், 'கடைசியில் நன்மையே வெல்லும்' என்ற கொள்கையில் நம்பிக்கை உள்ளவராம்! விடியோ கேம் அடிமையான தன் மகன் வில்லன்களை வழிபடுகிறான் ( 'Villains are kickass!') என்பதற்காக அவனுக்காகவே ஹீரோவை விட வில்லன் பலம் வாய்ந்தவனாக அமைத்து ஒரு அட்டகாசமான விடியோ கேம் தயாரிக்கிறார். அவருடைய கேரக்டரைப் பற்றி ஒரு சரியான உருவம் நம் மனதில் பதியும் முன்னரே அவர் கொல்லப் படுகிறார்; கிட்டத்தட்ட இடைவேளை வந்து விடுகிறது. அந்த சமயத்தில் விடியோ கேமில் இருந்து உயிருடன் வெளி வந்த வில்லன் ரா. ஒன்னை (Random Access One அல்லது ராவண்) அழிப்பதற்காக சேகரின் மகன் பிரதீக் இரண்டாவது ஷாருக் கானை (Good One , ஜீ-ஒன் அல்லது ஜீவன் ) கேமிலிருந்து உயிர்ப்பிக்கிறான். இந்தச் சின்னப் பையனையும் (மும்பையில் ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுவன் அர்மான் வர்மா) அவன் ஹேர் ஸ்டைலையும் பார்த்தால் சிறுவன் அல்ல சிறுமி போல் இருக்கிறது! ரா. ஒன் தான் விரும்பும் வடிவம் எடுக்கக் கூடியவன் என்பதால் இடைவேளைக்கு முன் ஒரு சைனீஸ்- அமெரிக்கன் நடிகரும் (டாம் வு) முடிவில் அர்ஜுன் ராம்பாலும் அந்த கேரக்டரைச் செய்திருக்கிறார்கள். அர்ஜுன் ராம்பால் கொஞ்ச நேரமே வந்தாலும் தத்ரூபமான வில்லன்; இவர் உதிர்க்கும் ஒரு 'நச்' வசனம்: 'வருஷா வருஷம் 'ராம்லீலா' கொண்டாடி ஏண்டா ராவணனை எரிக்கறீங்க? அவன் எப்போதும் சாவதில்லை என்றுதானே?' டாம் வு பார்வையில் உக்கிரம் கொப்பளிக்கிறது; அவ்வப்போது 'ஆளவந்தான் ' கமல் போல் கழுத்தை நொடிக்கிறார் .

இடைவேளையின் போது ரொம்ப நேரம் 'பாப் கார்ன்' வாங்கப் போனால் ரஜினி வரும் காட்சியை மிஸ் பண்ண வேண்டியதுதான்! சொல்லப் போனால் வலியத் திணிக்கப் பட்ட இந்தக் காட்சி ஒட்டவே இல்லை என்பது ஒரு புறம் இருக்க ரஜினி ரொம்ப வயதானவராகவும் களைப்பாகவும் தெரிகிறார். அவருடைய தீவிர ரசிகர்களுக்கு இது மிகப் பெரிய ஏமாற்றம்தான்! ரஜினி சார், 'ராணா' வோ 'கோச்சடையானோ' எப்போ ரிலீஸ்?

இடைவேளைக்குப் பிறகு படம் திடீரென்று சூடு பிடிக்கிறது! பொதுவாக கதை மும்பையிலிருந்து லண்டனுக்கு நகரும். இங்கு கதை லண்டனிலிருந்து மும்பைக்கு நகர, உடனே அசுர வேக 'சேஸ்' காட்சிகளுடன் ஒரு non- stop roller coaster ride தான்! இந்தப் பகுதியில் (ஏன் மொத்தப் படத்திலுமே!) முக்கியமானவை இரண்டு விஷயங்கள்தான்; செனிகலீஸ்- அமெரிக்கன் பாடகர் அகான் பாடியிருக்கும் 'சம்மக் சல்லோ ' பாடல் 'refreshingly different'. படத்தில் பார்ப்பதற்கும் ஒரு விஷுவல் ட்ரீட்! இவருடன் தமிழ் மற்றும் இந்தியில் சில வரிகளைப் பாடியிருப்பவர் ஹம்சிகா ஐயர். ரசிக்கக் கூடிய தமிழ் வரிகள் (எழுதியவர் பெயர் தெரிந்தால் சொல்லுங்கள்) :

'என்னைத் தொட்டு என்னுள்ளத்தை நொறுக்க மாட்டியோ?
என்னைப் போலப் பெண்ணைப் பார்த்து மயங்க மாட்டியோ?
கண்ணில் கண்ணைப் பூட்டி விட்டால் சிரிக்க மாட்டியோ?
என்னில் உன்னைச் சூட்டி விட்டால் ஒட்டிக்க மாட்டியோ?'

இந்தக் காட்சியில் சிவப்பு டிரெஸ்சில் கரீனா கபூர் மிகவும் குளுமை! (ஒரு கொசுறு தகவல் - பல படங்களுக்குப் பிறகு இப்போதுதான் சேலையில் தோன்றுகிறாராம். சைஸ் ஸீரோவை எல்லாம் மூட்டை கட்டியாச்சாம்மா Bebo?!) மற்ற நேரங்களில் சுமாராக நடிக்கவும் செய்கிறார். அவரைச் சொல்லிக் குற்றமில்லை; கணவன் இறந்த பின் இவரது மகன் பிரதீக் ஜீவன் ஷாருக்கை நண்பனாக முழுமையாக ஏற்றுக் கொண்டு விட, இவர் ஜீவனை ஏற்கிறாரா இல்லையா என்ற குழப்பம் கரீனாவுக்கு மட்டுமல்ல, நமக்கும் இருக்கிறது, ஏன், இயக்குனருக்கே படம் முடியும் வரை இருக்கிறது!

அடுத்தது க்ளைமாக்ஸ்! 'எந்திரனை'ப் போலவே எடுக்கப் பட்ட எலெக்ட்ரிக் ட்ரெயின் காட்சியில் 'எந்திரனை' விட சூடு பறக்கிறது! கடைசியில் சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் தூள் தூளாக இடிந்து விழும் காட்சியில் கிராபிக்ஸ் அசாத்திய மிரட்டல்! ஆனால் இவற்றைத் தவிர செலவழித்த கோடிகளுக்கு ஏற்ற கிராபிக்ஸ் காட்சிகள் அதிகம் இல்லை. 'எந்திரனில்' பார்த்துப் பார்த்து செதுக்கப்பட்டிருந்த அழகான சின்னச் சின்ன கிராபிக்ஸ் காட்சிகள் நினைவுக்கு வருகின்றன. ஒரு காட்சியில் ஜீவன் ஷாருக்கின் மூக்கிலிருந்து ஏதோ நீல நிற வயர் வெளி வர, கரீனா அதைப் பார்த்து அதிர்ச்சி அடைய , ஷாருக் பொறுமையாக முழு வயரையும் எடுத்து வெளியே எறிகிறார். டைரக்டர் சார், எங்க ஊர் வடிவேலு சொல்வது போல் 'சின்னப் புள்ளத்தனமால்ல இருக்கு?'

பட ஆரம்பத்தில் வரும் 'கல்நாயக்' சஞ்சய் தத் , 'தேசி கேர்ள்' பிரியங்கா சோப்ரா விடியோ கேம் காட்சியைக் குழந்தைகள், பெரியவர்கள் எல்லோரும் ரசிக்கிறார்கள்.(ஹிஹி , நானும்தான்!) ஹிந்தியில் மிக விரசமான அர்த்தம் தரும் ' இஸ்கீ லீ', உஸ்கீ லீ ' ,'சப்கீ லீ' என்ற பெயர்களை மூன்று சைனீஸ் விடியோ கேம் பெண்களுக்கு வைத்திருக்கிறார்கள்; இவர்கள் மூவரும் ப்ரூஸ் லீயின் சகோதரிகளாம்! 'கொஞ்சம் கொஞ்சம்' என்பதை 'காண்டோம் காண்டோம் ' என்று அபத்தமாகக் காமெடி செய்ய முயன்றிருக்கிறார்கள்! பத்து நிமிடமே திரையில் வந்தாலும் டாக்சி டிரைவர் சுரேஷ் மேனனின் காமெடி அதகளம்!

படத்தில் இடையிடையே ஷாருக் கானின் குழந்தை ரசிகர்களுக்காக அட்வைஸ், 'வீட்டில் இந்த ஸ்டண்டை எல்லாம் முயற்சிக்காதீர்கள்' என்று! நடுவே ஒரு காட்சியில் சிகரெட் பிடிப்பதற்கு எதிராகவும் ஒரு அட்வைஸ்! எப்படி? ஷாருக் கான் சிறுவனிடம் கேட்கிறார் ' ஆண்டுதோறும் ஆயிரக் கணக்கானோர் சிகரெட் பிடிப்பதை விட்டு ஒழிக்கிறார்கள்; எப்படி தெரியுமா?' பையன்- 'எப்படி? பேக்கட்டின் மேல் உள்ள எச்சரிக்கையைப் படித்து விட்டா? ' ஷாருக்-'இல்லை! தாங்களே செத்துப் போவதன் மூலம்!'

படம் பார்க்க வேண்டுமென்றால் '3D' இல் பாருங்கள்; 'எந்திரன்' என்று ஒரு படம் வரவேயில்லை என்று நினைத்துக் கொள்ளுங்கள்! அப்போதுதான் கொஞ்சமாவது ரசிக்கலாம்!

மொத்தத்தில் இயக்குனர் அனுபவ் சின்ஹா- 'அனுபவம் பத்தாத சின்ஹா! '

சினிமா விரும்பி

http://youtube-tamil.blogspot.com



  • http://youtube-tamil.blogspot.com


  • No comments:

    Post a Comment

    Popular Posts

    My Blog List