பொதுவாழ்வில் நாணயத்துக்கு ஒரு சின்னமாகப் பெருந்தலைவர் காமராஜ், அமரர் கக்கன் போன்றோரைச் சொல்வார்கள். இப்போது இந்திய நாணயத்துக்கே ஒரு சின்னம் வந்து விட்டது. கிட்டத்தட்ட 120 கோடி மக்கள் தொகை, தேசத்தின் உற்பத்தி 1.25 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள், ஒரு ட்ரில்லியனுக்கு மேல் GDP உள்ள பன்னிரண்டு நாடுகளில் ஒன்று; (பன்னிரண்டாவதுதான், இருந்தாலும் பரவாயில்லை, நூற்றுப் பன்னிரண்டு இல்லையே !) இன்றைய தேதியில் உலகின் அதிவேக வளர்ச்சி கொண்ட நாடுகளில் ஒன்று எனப் பல பெருமைகள் இருக்கும் போது நம் நாணயத்துக்கென்று ஒரு சின்னம் இருப்பது முறைதானே?
இதை உருவாக்கியவர் D. உதயகுமார் என்ற ஒரு தமிழர் என்பதிலும் நமக்குப் பெருமைதான். வெறும் ஹிந்தி 'ர' வில் மேலே இரண்டு கோடுதானே போட்டார், இது என்ன பெரிய விஷயமா? மறைமுகமாக அல்ல, கிட்டத்தட்ட நேரிடையாகவே ஹிந்தியைத் திணிக்கிறார்களே (கேட்டால் அது ஹிந்தி அல்ல, தேவநாகரி என்று சப்பைக்கட்டு கட்டுவார்கள்!) என்றெல்லாம் விமர்சனங்கள் உள்ளன. இவற்றில் ஓரளவு நியாயமும் உள்ளது. இருப்பினும், தேசத்துக்கென்று ஒரு மூவர்ணக் கொடியைப் போல், ஒரு ' ஜன கண மன ' வைப் போல், ரூபாய் நோட்டில் மகாத்மா காந்தியைப் போல் இதுவும் பெருமிதம் கொள்ள வேண்டிய ஒன்றுதான். புழக்கத்தில் உள்ள கரன்சி நோட்டுக்களின் எண்ணிக்கையில் நாம்தான் உலகில் முதலிடம் என்று நினைக்கிறேன். (தவறாக இருந்தால் திருத்தவும்) . அந்த நோட்டுக்களில் இந்தச் சின்னம் அச்சிடப்படாது என்பது சற்றே ஏமாற்றமளிக்கிறது! (இந்தக் கட்டுரை எழுதிப் பல மாதங்களுக்குப் பிறகு செப்டம்பர் 2011 இல் ' र ' சின்னம் பதித்த இரண்டு ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் வந்து விட்டன!) இது இல்லாமலே கூடக் கண்டிப்பாக இந்தச் சின்னம் உலக அளவில் விரைவில் பிரபலமாகியே தீரும். அமெரிக்கா (டாலர்), இங்கிலாந்து ( U.K பவுண்டு ) , ஜப்பான் (யென்) , ஐரோப்பிய யூனியன் (யூரோ) இவற்றுக்கு இணையாக நம் ரூபாய்க்கும் ஒரு சின்னம் வந்து விட்டது. மேலும் Rupee, ருப்பையா என்றெல்லாம் அழைக்கப்படும் நேபாளம், பாகிஸ்தான் , இலங்கை மற்றும் இந்தோனேசிய நாட்டுக் கரன்சிகளில் இருந்து நமக்கு ஒரு தனிப்பட்ட அடையாளம் இருக்கப் போகிறது. ஒரே ஒரு சிறு குறை! டாலருக்கு $ என்றும் சென்டுக்கு c இன் மேல் இரண்டு கோடு என்றும் வழங்குவது போல் நம்முடைய நயா பைசாவுக்கு ஒரு சின்னம் இல்லாமல் விட்டு விட்டார்கள்! பின்னாளில் உருவாக்குவார்களோ என்னவோ!
வரவேற்கிறோம்! வாழ்க र !
சினிமா விரும்பி
http://youtube-tamil.blogspot.com
http://youtube-tamil.blogspot.com
No comments:
Post a Comment